மும்பை: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் விமான நிறுவனங்கள் என 30 வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிய ஒருவரை மகாராஷ்டிர போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் உள்ள பல விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் சில அமைச்சர்களுக்கு 30 வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக 35 வயது நபர் நாக்பூரில் மகாராஷ்டிரா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீராம் உய்கே என்பவர் அக்டோபர் 25 மற்றும் 30 ஆம் தேதிக்கு இடையில் 30 வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கிறார். அவர் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்..
கடந்த இரண்டு வாரங்களில், 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால் விமான நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த அச்சுறுத்தல்கள் சோதனைக்கு பின்னர் "புரளி" என்று அறிவிக்கப்பட்டன. பெரும்பாலான அச்சுறுத்தல்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவே வெளியிடப்பட்டன.
விசாரணையின் அடிப்படையில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் உட்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் உய்கே மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக காவல்துறை கூறியது. மேலும், பயங்கரவாத குழுக்கள் ஆறு விமான நிலையங்களை குறிவைத்துள்ளதாகவும், பல விமான நிறுவனங்களின் 31 விமானங்கள் கடத்தப்படும் என்றும் உய்கே தனது மிரட்டல் மின்னஞ்சல்களில் கூறியிருந்தார்.
» திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்: கோயில் மாட வீதியில் போக்குவரத்து பாதிப்பு
» தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம்: தமிழ்நாடு தினத்துக்கு விஜய் வாழ்த்து!
இந்த விவகாரம் குறித்து பேசிய நாக்பூரின் துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) லோஹித் மாதானி, நாக்பூர் நகரத்தில் இருந்து வியாழன் இரவு உய்கே கைது செய்யப்பட்டதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
முன்னதாக, இந்த மாவட்டத்தில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா விமானத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இஜாஸ் (26) என்பவரை கேரள போலீசார் கைது செய்தனர். சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டம், பிஎன்எஸ் மற்றும் கேரள போலீஸ் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் இஜாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.