கரூர்: லாலாபேட்டை அருகே 2 இருவாகனங்கள் எதிரெதிரே மோதி விபத்து ஏற்பட்டதில், விபத்து ஏற்படுத்தியவரின் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள லாலாபேட்டை கொடிக்கால் தெருவைச் சேர்ந்தவர் பிரவீண் குமார் (26). இவர் தனது புதிய மோட்டார் சைக்கிளில் பிள்ளாபாளையம் வழியாக சென்றார். அப்போது, சுண்ணாம்புகார தெரு பிரிவு பகுதியில் எதிரே ஸ்கூட்டரில் வந்துக் கொண்டிருந்த கீழத்தெருவைச் சேர்ந்த சண்முகப் பிரியன் (32) வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருவரும் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்றும் இருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சண்முகப் பிரியனின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் விபத்துக்குள்ளாகி அப்பகுதியில் சாலையில் நின்றுக் கொண்டிருந்த பிரவீணின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.
இதனால் சாலையில் நின்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சுமார் 2 மணி நேரம் பற்றி எரிந்த நிலையில் முற்றிலும் தீக்கிரையாகி சேதமடைந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற லாலாபேட்டை போலீஸார் விபத்தை ஏற்படுத்தியதாக பிரவீண் குமார் மீது வழக்குப்பதிவு செய்தும், மோட்டார் சைக்கிள் எரிந்தது குறித்து கீழத்தெருவைச் சேர்ந்த ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.