மதுபோதையில் தகராறு: அரியலூர் அருகே இளைஞர் கொலை

By பெ.பாரதி

அரியலூர்: அரியலூர் அருகே இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாபதி காலனித்தெருவைச் சேர்ந்தவர் மணி மகன் சமுத்திரம்(37). கூலித் தொழிலாளியான இருவருக்கும், அதேத் தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி(45) என்பவரது குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கலியமூர்த்திக்கு 5 மகன்கள். இந்நிலையில் நேற்று (அக்.31) தீபாவளியையொட்டி கலியமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் சிலர் மது அருந்திவிட்டு, சமுத்திரத்திடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதில், சமுத்திரத்தை கலியமூர்த்தியும் அவரது மகன்களும் கத்தியால் குத்தியுள்ளனர். இதில், சமுத்திரத்துக்கு தொடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகமாக வெளியேறியுள்ளது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் சமுத்திரத்தை மீட்டு திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சமுத்திரம் இன்று (நவ.1) காலை சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த வழக்கு சம்பந்தமாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கலியமூர்த்தி மற்றும் அவரது மகன்களையும் திருமானூர் போலீஸார் நேற்று முன்தினம் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இன்று சமுத்திரம் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE