சென்னை | சிபிஐ அதிகாரி பெயரில் சேலம் தொழிலதிபரிடம் மோசடி: ரூ.1 கோடி பறித்த வடமாநிலத்தவர் 2 பேர் கைது

By KU BUREAU

சென்னை: சேலம் தொழில் அதிபரிடம், சிபிஐ அதிகாரி பேசுவதாக மிரட்டி ரூ.1 கோடி பறித்த குற்றச்சாட்டில் ராஜஸ்தான் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த தொழில் அதிபருக்கு அண்மையில் போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் அவர், உங்களது செல்போன் எண்ணானது பணமோசடி வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளது. அதனால் உங்கள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது. உங்கள் மேல் சட்டநடவடிக்கை எடுக்காமல் இருக்க சிபிஐ அதிகாரியிடம் பேசுங்கள் என அந்த அழைப்பை ஒரு போலி சிபிஐ அதிகாரி ஒருவருக்கு மாற்றியுள்ளார்.

அந்த நபர், போலீஸ் சீருடையில் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் சேலம் தொழில் அதிபரிடம் உங்களை கைது செய்ய உள்ளோம். நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவும், நாங்கள் உங்களை கைது செய்யாமல் இருக்கவும் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டும்.

அதனை நாங்கள் சரிபார்க்கும் வரை நீங்கள் எங்கள் டிஜிட்டல் கஸ்டடியில்தான் இருக்க வேண்டும் என கூறியதுடன் வீடியோ கால் இணைப்பை தூண்டிக்க கூடாது, இதனைபற்றி வேறு யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும், இல்லையென்றால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார்.

இந்த அச்சுறுத்தல்களை தொடர்ந்து, அந்த நபர்களின் வங்கி கணக்குக்கு ரூ.1 கோடி பணத்தை தொழிலதிபர் அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து தமிழக காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார்.

அப்பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து இந்த மோசடியின் பின்னணியில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பிரதீப் சிங், சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த யஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் சண்டிகரில் வைத்து கைது செய்தனர்.

இக்கும்பல் இதே பாணியில் பலரிடம் கோடிக் கணக்கில் பணம் பறித்துள்ளது. அவர்களிடமிருந்து ரூ.23 கோடியே 25 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இவர்களின் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்ட கும்பல் குறித்து போலீஸார் தொடர்ந்து துப்பு துலக்கி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE