புது டெல்லி: தீபாவளிக்காக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகளில் இருந்து மின்சாரம் தாக்கி 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது.
டெல்லி முகுந்த்பூரில் உள்ள ராதா விஹாரில் வாடகைக்கு வசிக்கும் சந்தோஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தீபாவளியை முன்னிட்டு இவரின் வீட்டு உரிமையாளர் சர்ஜூர் ஷா வீட்டின் கூரையில் அலங்கார மின் விளக்குகளை பொருத்தியுள்ளார். இந்த சூழலில் நேற்று இரவு 07:00 மணியளவில், விளையாடிக்கொண்டிருந்தபோது அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளை தொட்ட சந்தோஷின் 5 வயதுடைய இளைய மகனான சாகரை கடுமையாக மின்சாரம் தாக்கியது.
உடனடியாக அந்த குழந்தையை முகுந்த்பூர் அருகே உள்ள ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக அவர்கள் அச்சிறுவனை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து அவர்கள் இரவு 10:30 மணிக்கு ஷாலிமார் பாக் ஃபோர்டிஸ் மருத்துவமனையை அடைந்தனர். அங்கு இரவு 10:38 மணியளவில் சிறுவன் சாகர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பால்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.