விடுப்பு கொடுக்க மறுத்த பெண் அதிகாரி: அரசு ஊழியரின் 7 மாத கர்ப்பம் கலைந்ததால் சோகம்

By KU BUREAU

ஒடிசா: கேந்திரபாரா மாவட்டத்தில் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி மறுத்ததால், தனது ஏழு மாத கர்ப்பம் கலைந்ததாக 26 வயதான அரசு ஊழியர் குற்றம்சாட்டியுள்ளார்.

டெராபிஸ் பிளாக்கில் உள்ள குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி (சிடிபிஓ) சிநேகலதா சாஹூவால் மனிதாபிமானமற்ற முறையில் தன்னை நடத்தியதாக அரசு ஊழியர் பர்ஷா பிரியதர்ஷினி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரியதர்ஷினியின் புகாரின்படி, "கடந்த மூன்று ஆண்டுகளாக நான் சி.டி.பி.ஓ.வால் சித்திரவதை செய்யப்பட்டேன். கர்ப்பத்திற்குப் பிறகு துன்புறுத்தல் அதிகரித்தது. அது என் குழந்தை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது, இதனால் என் குழந்தையை இழந்தேன்.

அலுவலகத்தில் பணிபுரியும் போது எனக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. எனவே சி.டி.பி.ஓ., சிநேகலதா சாஹூ மற்றும் மற்ற ஊழியர்களிடம் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் சி.டி.பி.ஓ. என் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. பின்னர் எனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் அலுவலகத்திற்கு வந்து என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சைக்கு வருவதற்குள் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்

இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி, சிடிபிஓ மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரிடமும் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

இதுகுறித்து டெராபிஸ் பிடிஓ அனிருதா பெஹரா கூறுகையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சாஹூவை பதவியில் இருந்து நீக்கியதாக துணை முதல்வர் பிரவதி பரிதா கூறினார். மேலும், இது குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தி அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE