ஹரித்வார்: மோட்டிச்சூர் ஸ்டேஷன் அருகே ரயில் தண்டவாளத்தில் டெட்டனேட்டரை வைத்த தண்டவாள பராமரிப்பு பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்வமிகுதியில் அவர் இதை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அக்டோபர் 27 அன்று, உத்தராகண்ட் மாநிலம் மொரதாபாத் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மோட்டிச்சூர் யார்டில் டெட்டனேட்டர் வெடித்தது குறித்து அறிவிப்பு வந்தது. இந்த தகவல் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிஆர்பி துணை கண்காணிப்பாளர் ஸ்வப்னில் மோயல், போலீஸ் குழுவுடன் அந்த இடத்தை ஆய்வு செய்தார்.
இந்த சம்பவம் காரணமாக உயிர், உடைமை சேதம் எதுவும் ஏற்படவில்லை. மோட்டிச்சூர் யார்டு சிசிடிவி கேமராக்களில் பதிவான கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்ததில், தண்டவாளத்தின் அருகே ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவது தெரிந்தது. அவர் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த அசோக் குமார் என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனையடுத்து ஹரித்வாரில் உள்ள அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) இன்று மோட்டிச்சூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் டெட்டனேட்டரை வைத்ததாக அசோக் குமாரை கைது செய்துள்ளது. தண்டவாள பராமரிப்புக்காக பணியாற்றும் தனியார் ஒப்பந்தம் தொழிலாளியான அசோக் குமார், ரயில்வே குகைக்கு அருகே டெட்டனேட்டரை கீழே இருந்து எடுத்ததாகவும், ஆர்வத்தின் காரணமாக அதன் உரத்த ஒலியைக் கேட்க அதை தண்டவாள பாதையில் வைக்க முடிவு செய்ததாகவும் கூறினார்.
» மலேசியா சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் 15 அடி உயர நாச்சியார் கோயில் வெண்கல வேல்
» ரயிலில் கழிப்பறை வசதி சரியில்லை: பயணிகளுக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க ரயில்வேக்கு உத்தரவு!
அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்து, ஹரித்வார் ஜிஆர்பி நிலையத்தில் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 288 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய ஹரித்வார் ஜிஆர்பி நிலைய அதிகாரி அனுஜ் சிங், “சிக்னல் டெட்டனேட்டர்கள் அதிக சத்தத்துடன் ரயில்களை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தாது” என்று கூறினார்