பெங்களூரு: தனது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்தி அனுப்பியதாக கூறி ரசிகர் ஒருவரை சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
47 வயதான நடிகர் தர்ஷன் தனக்கு இரண்டு கால்களிலும் உணர்வின்மை இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் ஜாமீன் கோரியிருந்தார். மேலும், மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கோரி அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், அவரது கோரிக்கையை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார், மருத்துவ ஆவணங்களில் தர்ஷன் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்றும், அறுவை சிகிச்சையை அரசு மருத்துவமனையில் செய்யலாம் என்றும் வாதிட்டார்.
இதனையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றம் தர்ஷனுக்கு இன்று 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. “தர்ஷன் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், மேலும் ஏழு நாட்களுக்குள் அவர் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்” என்று நீதிபதி எஸ்.விஸ்வஜித் ஷெட்டி கூறினார்.
» ஈரோடு - சென்னை தீபாவளி சிறப்பு ரயில் ரத்து
» தீபாவளி: வெள்ளகோவிலில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு 9-வது ஆண்டாக புத்தாடைகள் வழங்கல்
பெங்களூரை சேர்ந்த ரேணுகாசாமியை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக பவித்ரா கவுடா மற்றும் 15 பேருடன் ஜூன் 11 அன்று தர்ஷன் கைது செய்யப்பட்டார். 33 வயதான ரேணுகாசாமி, பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தர்ஷன் கொலை செய்ததாகவும் போலீஸார் கூறியுள்ளனர். பெங்களூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள மழைநீர் வடிகால் அருகே ஜூன் 9-ம் தேதி ரேணுகாசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
செப்டம்பரில், பெங்களூரு போலீஸார் இந்த வழக்கில் தொடர்புடைய 17 நபர்களுக்கு எதிராக 3,991 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தனர், இதில் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா ஆகியோர் அடங்குவர். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தர்ஷன் மேலும் மூவருடன் சுதந்திரமாக சுற்றித் திரிந்த புகைப்படங்கள் ஆகஸ்ட் மாதம் வெளிவந்ததால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, அவர் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.