அஜித் பவார் அரசியல் ஆதாயத்துக்காக சொந்த குடும்பத்துக்கே துரோகம் செய்தார்: சரத் பவார் குற்றச்சாட்டு

By KU BUREAU

பாராமதி: தனது அரசியல் ஆதாயத்துக்காக அஜித் பவார் குடும்பத்தை உடைத்தார் என என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிராவில் பாராமதி சட்டமன்றத் தொகுதியில் அஜித் பவார் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக என்சிபி( எஸ்பி) வேட்பாளராக சரத் பவாரின் பேரனும், அஜித் பவாரின் சகோதரர் மகனுமான யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். இதையடுத்து திங்களன்று ஒரு பேரணியில் உரையாற்றிய பாராமதி எம்எல்ஏ அஜித் பவார், யுகேந்திராவின் வேட்புமனுவைக் குறிப்பிட்டு, குடும்பத்தில் பிளவு ஏற்படுவதை "மூத்தவர்கள்" தவிர்த்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் பாரமதி அருகே கன்ஹேரி நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய சரத் பவார், “குடும்பத்தை உடைக்கும் பாவத்தை எனது பெற்றோரும் சகோதரர்களும் எனக்கு ஒருபோதும் கற்பிக்கவில்லை. மகாராஷ்டிராவை வழிநடத்த மக்கள் நீண்ட காலத்திற்கு முன்பு என்னை பணித்தனர். நான் இப்போது ஒரு வழிகாட்டியாக உள்ளேன், கட்சி விவகாரங்களை புதிய தலைமுறையிடம் ஒப்படைத்துள்ளேன்.

துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் ஆட்சியில் இல்லாதபோது, ​​​​எங்கள் சகாக்கள் சிலர் திடீரென விடியற்காலையில் எழுந்து சத்தியப்பிரமாணம் செய்தனர். அந்த அரசாங்கம் நான்கு நாட்கள் கூட நீடிக்கவில்லை. நான்கு முறை துணை முதல்வராக இருந்தபோதும் துணை முதல்வராகப் பதவியேற்க அவர் (அஜித்) மறுபக்கம் போனார். உங்களுக்கு அதிக காலம் பதவி கிடைத்துள்ளது. ஒரே ஒரு முறை பதவி கிடைக்காமல் போனால் குடும்பத்தை உடைப்பீர்களா?.

இப்போது நான் குடும்பத்தை உடைத்தேன் என்று கூறுவதை கேட்பதற்கே வேடிக்கையாக உள்ளது. குடும்பத்தை உடைக்கும் பாவத்தை எனது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் ஒருபோதும் எனக்கு கற்பிக்கவில்லை. அனந்தராவ் பவார் (அஜித் பவாரின் தந்தை) உட்பட எனது சகோதரர்கள் அனைவரும் என்னுடன் வாழ்ந்தனர்" என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் நவம்பர் 23 ஆம் தேதி அன்று எண்ணப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE