அரக்கோணம் அருகே மின் இணைப்புக்கு ரூ.8,000 லஞ்சம்: ஃபோர்மேன் கைது

By ப.தாமோதரன்

அரக்கோணம்: அரக்கோணத்தில் விவசாயியின் வீட்டின் மீது செல்லும் உயரழுத்த மின் கம்பியை மாற்றி தருவதற்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அன்வர்த்திகான்பேட்டை மேல்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம் (46). விவசாயியான இவருக்கு சொந்தமான காலிமனை அன்வர்திகான்பேட்டையில் உள்ளது. அங்கு அவர் கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு (சிங்கள் பேஸ் லைன்) கேட்டும், வீட்டின் மேல் செல்லும் உயரழுத்த மின்கம்பியை மாற்றி அமைக்கக் கோரியும் மின்னல் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார்.

இதனையடுத்து, மின்வாரிய அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி வீட்டுக்கு மின் இணைப்பு பெற ரூ.5,192 மற்றும் உயரழுத்த மின் கம்பியை மாற்றி அமைக்க ரூ.18,420 செலுத்தி உள்ளார். ஆனால், அதற்கான பணிகளை மின்வாரிய அலுவலர்கள் மேற்கொள்ளாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டின் மேலாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பியை மாற்றி அமைக்க கோரி மின்வாரிய ஃபோர்மேன் கிருஷ்ணன் (59) என்பவரை அணுகியுள்ளார் சற்குணம். அதற்கு கிருஷ்ணன் ரூ.8 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். இதை கொடுக்க சம்மதிக்காத சற்குணம், இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து, ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவல்துறையினர் சற்குணத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினர். அதனை, அவர் இன்று (29-ம் தேதி) மின்னல் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்த கிருஷ்ணனிடம் வழங்கினார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவரிமிடருந்து கணக்கில் வராத 17,640 ரூபாயையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராணிப்பேட்டை மின்வாரிய அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE