சட்டவிரோத குவாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: சட்டவிரோத குவாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனியைச் சேர்ந்த மகாராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு சட்டவிரோதமாக, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக சுமார் 32,000 யூனிட் அளவில் உடைகல் மற்றும் மண் எடுத்துள்ளனர். இதனால் தமிழக அரசுக்கு நூறு கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கு நாட்டு வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து பாறைகளை உடைப்பதால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, கல் குவாரியில் சட்ட விரோதமாக, அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவில் கற்களை வெட்டி எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், முகமது சபீக் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “சட்ட விரோத குவாரி நடைபெறுவதால் அருகில் உள்ள கிராமங்களின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக குவாரி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அரசு தரப்பில், “சட்டவிரோத குவாரி செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என வாதிடப்பட்டது.

பின்னர் தலைமை நீதிபதி, “இதுபோன்று சட்ட விரோத குவாரிகளை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினருக்கு புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் காவல்துறையினர் தங்களது பணியை இழக்க நேரிடும். இந்த மனு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், தமிழக வருவாய்த் துறைச் செயலாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE