உ.பியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்: தடியடி நடத்திய போலீஸார்; அதிர்ச்சி வீடியோ

By KU BUREAU

உத்தரப்பிரதேசம்: காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் வன்முறையாக மாறியது. இதனால் வழக்கறிஞர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தின் போது பல வழக்கறிஞர்கள் காயமடைந்தனர்.

காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தொடர்பாக நீதிபதிக்கும், வழக்கறிஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.வழக்கறிஞர்கள் நீதிபதியின் அறையில் கூடி சலசலப்பை ஏற்படுத்தியதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் நாற்காலிகளை தூக்கிக்கொண்டு வழக்கறிஞர்களை விரட்டியடிக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. பின்னர், நிலைமையைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. நீதிமன்ற வளாகத்தில் இருந்து வழக்கறிஞர்களை வெளியேற்ற போலீசார் தடியடி நடத்தும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலின் போது நீதிமன்ற அறையிலும் நாற்காலிகள் வீசப்பட்டன.

தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர். இச்சம்பவத்தையடுத்து, அனைத்து நீதிபதிகளும் நீதிமன்றத்தில் பணி செய்வதை நிறுத்தினர். வழக்கறிஞர்கள் சங்கமும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE