சேலத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பு அலுவலர் கைது

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் புதிய வீட்டுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பு அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மிட்டா புதூர் ஆண்டிச்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சாஜு (32). இவர் அப்பகுதியில் புதியதாக வீடு கட்டியுள்ளார். புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய சாஜூ, அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலக வரி வசூலிப்பு அலுவலர் ராஜாவை (52) அணுகியுள்ளார். வீட்டுக்கு சொத்து வரி குறைத்து நிர்ணயம் செய்ய ரூ.35 ஆயிரம் லஞ்சமாக வரிவசூலிப்பு அலுவலர் ராஜா கேட்டுள்ளார். சாஜூ லஞ்சம் கொடுக்க முன் வராத நிலையில், லஞ்ச தொகையை ரூ.30 ஆயிரம் கொடுத்தால் வரி நிர்ணயம் செய்து தருவதாக ராஜா கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சாஜு, இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். நேற்று காலை அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் வரி வசூலிப்பாளர் ராஜாவிடம் சாஜு லஞ்சமாக ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீஸார் மறைந்து இருந்து, கண்காணித்தனர். சாஜூ லஞ்சப்பணம் ரூ.30 ஆயிரத்தை ராஜாவிடம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் அவரை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே இதுபோன்று வரியை குறைத்து நிர்ணயம் செய்ய ராஜா லஞ்சம் பெற்றுள்ளாரா என்றும் அவரது அறை மற்றும் இருசக்கர வாகனத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஆய்வு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE