புதுச்சேரி கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்கள்: இருவரின் உடல்கள் மீட்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே கடலில் குளித்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான நிலையில், அவர்களது உடல்கள் இன்று மீட்கப்பட்டன.

புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 10 பேர் ஞாயிற்றுக் கிழமை வீராம்பட்டிணம் பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள கடற்கரை முகத்துவாரப் பகுதியில் மாலையில் குளித்துள்ளனர். அப்போது அதில், குமாரபாளையம் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த திவாகர் (20), முத்திரப்பாளையம் மோகன்தாஸ் (20) ஆகியோர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

உடனே அங்கிருந்த மற்ற மாணவர்கள் சத்தம் போட்டனர். அங்கிருந்த மீனவர்கள் விரைந்து வந்து கடலில் மூழ்கிய மாணவர்களைத் தேடினர். ஆனால், அவர்களை மீட்கமுடியவில்லை. தகவலறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸாரும் வந்து மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் இருவரையும் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று அப்பகுதியில் அவர்கள் இருவரது உடல்களும் மிதப்பதாக மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து துறைமுகப் படகில் சென்ற அரியாங்குப்பம் போலீஸார், இரண்டு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்கள் உயிரிழந்தது குறித்து அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE