ஹைதராபாத்: 8 கோடி ரூபாய் பணம் கொடுக்க மறுத்த கணவனை, மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
8 கோடி ரூபாய் பணம் வழங்க மறுத்த தனது கணவன் ரமேஷை, 29 வயதான நிஹாரிகா என்ற பெண் தனது காதலர் நிகில் மற்றும் கூட்டாளி அங்கூருடன் சேர்ந்த கொலை செய்துள்ளார்.
அக்டோபர் 8 ஆம் தேதி, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு காபி தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் ஒரு சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பாதிக்கப்பட்டவரின் அடையாளம் ஆரம்பத்தில் தெரியவில்லை. இதனையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அப்பகுதியில் காணப்பட்ட ரமேஷின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிவப்பு மெர்சிடிஸ் கார் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் நிஹாரிகா என்பவர் தனது கணவன் ரமேஷை காணவில்லை என புகாரளித்தார். அது குறித்து ஹைதராபாத் போலீஸார் விசாரித்து வந்தனர். இரு தரப்பு புகார்களும் ஒருங்கிணைந்து விசாரித்தபோது, பிரேத பரிசோதனை அறிக்கையில் நிஹாரிகா புகாரளித்த மூன்று, நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் உடல் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.
» திருப்பதி இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெயரில் மின்னஞ்சல்!
» 'என்றென்றும் புன்னகை’ 24 வருடங்கள் கழித்து ரீயூனியன்: ஷாலினி அஜித் பகிர்ந்த படம்
இதன்பின்னர் நிஹாரிகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரமேஷ் அக்டோபர் 1ஆம் தேதி ஹைதராபாத் உப்பலில் கொலை செய்யப்பட்டது உறுதியானது. கணவர் ரமேஷிடம் 8 கோடி ரூபாய் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததால் கொன்றதாகவும் நிஹாரிகா ஒப்புக் கொண்டார்.
தனது காதலன் நிகில் மற்றும் நண்பர் அங்கூருடன் சேர்ந்து நிஹாரிகா ஹைதராபாத்தில் ரமேஷை கொன்றார். பின்னர் அவர்கள் காரில் 800 கிலோமீட்டர்கள் பயணம் செய்து, கர்நாடகாவின் குடகில் உள்ள காபி எஸ்டேட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். மேலும், அவர்கள் ரமேஷின் பணம் மற்றும் சொத்து ஆவணங்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது. இந்த கொலையில் துப்பு துலக்குவதற்கு 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் இருந்த காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
நிதி மோசடி தொடர்பாக ஹரியானாவில் நிஹாரிகா முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலையான பிறகு நிஹாரிகா, ரமேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த உடனேயே, நிஹாரிகா ரமேஷிடம் ரூ.8 கோடி கேட்டுள்ளார். அவர் மறுத்ததால், அவர் நிகிலுடனும், சிறையில் சந்தித்த அங்கூருடனும் சேர்ந்து சதி செய்தார்.