மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர போலி ‘நீட்’ சான்றிதழ் கொடுத்த இமாச்சல் மாணவர் கைது

By KU BUREAU

ராமநாதபுரம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி நீட் சான்றிதழை அளித்த இமாச்சலப் பிரதேச மாநிலத்தைத் சேர்ந்த மாணவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. நீட் கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில், இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக் (22), தனது தந்தையுடன் முதலாமாண்டு மருத்துவப் படிப்பில் சேர வந்தார்.

மாணவர் அபிஷேக்கின் சான்றிதழ்களைச் சரிபார்த்த எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர், நீட் தேர்வுச் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டதால், கேணிக்கரை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

விசாரணையில், அபிஷேக் இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். 3-வது முறையாக நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு வெறும் 60 மதிப்பெண்களே எடுத்துள்ளார். இதனால், தனது தந்தைக்குத் தெரியாமல் போலியான நீட் தேர்வு சான்றிதழ் தயாரித்து, மருத்துவப் படிப்பில் சேர வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அபிஷேக் மீதுகேணிக்கரை போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE