போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவர்கள் - பெற்றோரை அழைத்து போலீஸார் அறிவுரை

By KU BUREAU

கானத்தூர்: சென்னை அருகே கானத்தூர், அஜ்மர்கான் நகரை சேர்ந்தவர் பாத்திமா பானு (52). நேற்று முன்தினம் இரவு, இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி போனை துண்டித்தார்.

பதறிய பாத்திமா பானு உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். கானத்தூர் போலீஸார் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் சென்று, பாத்தமாபானு வீட்டில் சோதனை செய்தனர். ஒரு மணி நேரம் நடத்திய சோதனையில் வெடிகுண்டு தகவல் புரளி என தெரிந்தது.

பாத்திமா பானுவுக்கு வந்த போன் நம்பர் குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், போனில் மிரட்டல் விடுத்தது, துரைப்பாக்கம், கஸ்டம்ஸ் காலனியை சேர்ந்த வரதராஜன் என்பவரின் 12 வயது மகன் என தெரிந்தது. சிறுவன் சக நண்பனுடன் சேர்ந்து தந்தையின் மொபைல் போனில் உத்தேசமாக மொபைல் நம்பர் டைப் செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பிராங் கால் செய்தது தெரிந்தது. போலீஸார், சிறுவர்கள் மற்றும் பெற்றோரை அழைத்து கடுமையாக எச்சரித்து உரிய அறிவுரை கூறி அனுப்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE