சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது, இலங்கைக்கு மற்றொரு விமானத்தில் செல்ல இருந்த 35 வயதுடைய ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. டிரான்சிட் பயணிகள் இருக்கும் பகுதியில் அமர்ந்திருந்த அவர், கழிப்பறைக்கு சென்று நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தார். இதை ரகசியமாக கண்காணித்த அதிகாரிகள், கழிப்பறைக்குள் சென்று பார்த்தனர்.
அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் பிளாஸ்டிக் பேப்பரில் கட்டப்பட்ட பார்சல் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் அந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்தபோது, ரூ.90 லட்சம் மதிப்புள்ள 1.24 கிலோ தங்கம் பேஸ்ட் வடிவில் இருந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இலங்கை பயணியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
தங்க கடத்தலுக்கு குருவியாக செயல்பட்டதை அவர் ஒப்புக்கொண்டதால், அவரை அதிகாரிகள் கைது செய்தனர். கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
» தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சுகாதார துறைக்கு யூடியூபர் இர்பான் கடிதம்
» கரூர்: இரவில் வீட்டுக்குள் தம்பதியை மிரட்டி 22 பவுன் நகை கொள்ளை