சோழவந்தான் அருகே சோகம்: கண்மாயில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை சோழவந்தான் அருகே கீழமட்டையான் கண்மாயில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் (36). விவசாய கூலித் தொழிலாளியான இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். கீழமட்டையான் கிராமத்தில் நடந்த பொங்கல் திருவிழாவுக்கு அழகர் தனது 4 வயது மகன் ஜெகதீஸ்வரனை மட்டும் அழைத்துச் சென்றார். அங்குள்ள கண்மாயில் குளிக்கச் சென்ற அழகர், மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது.

அப்போது கண்மாய் முழுவதும் நீர் நிரம்பியிருந்ததால் ஆழம் தெரியாமல் மூழ்கியதில் அழகரும் அவரது நான்கு வயது மகன் ஜெகதீஸ்வரனும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இதற்கிடையில், திருவிழாவுக்குச் சென்ற கணவனும், மகனும் வீடு திரும்பாததால் அழகரின் மனைவி இந்துமதியும் அவரது உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்நிலையில் இன்று காலையில் கண்மாயில் தந்தையும், மகனும் சடலமாக மிதந்ததைப் பார்த்துவிட்டு கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் காடுபட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். காடுபட்டி போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அழகரின் மனைவி இந்துமதி அளித்த புகாரின் பேரில் காடுபட்டு போலீஸார் விசாரிக்கின்றனர். கண்மாயில் குளிக்கும்போது ஆழம் தெரியாமல் தந்தையும் மகனும் நீரில் மூழ்கி இறந்தனரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் காடுபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE