திருவள்ளூர் அருகே ஆடிட்டர் தற்கொலை

By KU BUREAU

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள காக்களுர் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு(33). ஆடிட்டரான இவர், காக்களூர் பகுதியில் அலுவலகம் வைத்து பல நிறுவனங்களுக்காக ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளை செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவர் தன் மனைவி சுலோச்சனா பெயரில் நடத்தும் நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி கட்டுவதற்காக குமரகுருவை அணுகியதாக கூறப்படுகிறது.

இச்சூழலில், ரூ. 27 லட்சம் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை செலுத்த வேண்டும் என, பிரேம்குமார் நடத்தும் நிறுவனத்துக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஆடிட்டர் குமரகுருவிடம் பிரேம்குமார் கேட்டுள்ளார். மேலும், பிரேம்குமார், குமரகுரு வீட்டுக்குச் சென்று, அவரது தந்தை மீது கத்தி வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ. 27 லட்சத்தை ஆடிட்டர் குமரகுரு சரி செய்து கொடுத்துள்ளதாக தெரிகிறது. மீண்டும் சுலோச்சனா பெயரில் உள்ள நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என, நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, பிரேம்குமார், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ. 5 லட்சத்தை ஆடிட்டர் குமரகுரு கட்டாமல் மோசடி செய்துவிட்டதாக கடந்த 21-ம் தேதி திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி ஆடிட்டர் குமரகுரு, “பிரேம்குமார் தன்னிடம் ரூ. 10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது, அவர், ‘எஸ்பி அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்த தன்னை வழிமறித்து கொலை செய்து விடுவேன்’ என, பிரேம்குமார் மிரட்டியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரு தரப்பினர் அளித்த புகார்கள் தொடர்பாக, பிரேம்குமார் மற்றும் குமரகுருவிடம் நேற்று போலீஸார் விசாரணை நடத்த இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை ஆடிட்டர் குமரகுரு தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீஸார் சம்பவ இடம் விரைந்து, குமரகுருவின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஆடிட்டர் குமரகுரு, தன் வீட்டில் உள்ள தன் தாயாரின் புகைப்படம் அருகே உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதம், வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது காரில் இருந்த ரூ. 2.50 லட்சம், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE