ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை: இணையவழி விளையாட்டு ஆணைய உறுப்பினர் தகவல்

By ஆர்.ஆதித்தன்

கோவை: இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், அதை விளம்பரப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இணையவழி விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சாரங்கன் தெரிவித்தார்.

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டு அடிமையாதல் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை (அக்.25) நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையர்கள் ஸ்டாலின் (வடக்கு), அசோக்குமார் (போக்குவரத்து), சரவணகுமார் (தெற்கு), சுகாசினி (தலைமையகம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சாரங்கன் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக அரசின் முயற்சியில் மாணவர்களை இணையவழி மோகத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து முகாம்கள் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இணையவழி விளையாட்டு அடிமையாதல் குறித்த கருத்தரங்கம் சென்னைக்கு அடுத்து கோவையில் நடைபெறுகிறது. ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டு குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், அதை விளம்பரப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இணையவழி சூதாட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடல் நடத்தி வருகிறோம். இணையவழி விளையாட்டுகளை விளையாட, விளையாட தொடர்ந்து அடிமையாகிறார்கள். சாதாரணமாக விளையாட தொடங்கி இறுதியில் பணத்தை வைத்து விளையாடிய பிறகு வேலை, படிப்பு ஆகியவைகளில் நாட்டம் இல்லாமல் சென்று விடுகிறது. இணையவழி இணையதளங்கள் விதிமுறையின்றி செயல்படுகிறது. இந்த இணையதளங்களை கண்டுபிடித்து தடை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE