கோடநாடு வழக்கு: தலைமறைவான அதிமுக பிரமுகர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: கோடநாடு வழக்கில் தலைமறைவாக இருக்கும் அதிமுக பிரமுகர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீஸார் 5-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

கோடநாடு கொலை வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை நடத்தி வருகின்றனர். 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்த வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கின் சம்பந்தப்பட்ட மர வியாபாரி சஜீவன் கோவையில் வரும் ஐந்தாம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் அதிமுகவின் மாநில வர்த்தக அணியில் முக்கிய பொருப்பில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் தற்போது, தலைமறைவாக வெளிநாட்டில் உள்ளார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சம்மன் கோவையில் உள்ள அவரது மனைவியிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கூடலூரில் உள்ள தனது தோட்டத்தில் பணியாற்றும் வேலை ஆட்களுக்கு கள்ளத் துப்பாக்கி வாங்கி கொடுத்ததாகவும் அந்த கள்ளத் துப்பாக்கிகளை வைத்து அவர்கள் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி வந்ததாக, கூடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தது.

அந்த வழக்கில் சஜீவனை மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் அவரை கைது செய்ய முயன்ற போது, கடந்த ஏப்ரல் மாதம் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இந்நிலையில், கோடநாடு வழக்கின் விசாரணைக்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE