திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக ஆடுகள் களவாடப்படுவதால், அதனை வளர்ப்போர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்து சமூகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையானது முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து நிலையில் உள்ள மக்களும் பட்டாசு வெடித்தும், வீடுகளில் வழிபாடு செய்தும் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கமாகும். அப்போது, அசைவ உணவு படையலும் இடம்பெறும். இதற்காக, இறைச்சி கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பல கும்பல் சுற்றி வருகிறது. வீடுகள், காலி இடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் ஆடுகளை களவாடும் செயலில் அக்கும்பல் ஈடுபட்டுள்ளது. இரவு, பகல் பாராமல் ஆடுகள் களவாடப்படுகின்றன. ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது இரு சக்கர வாகனம், கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் வந்து ஆடுகளை களவாடி செல்கிறது மர்ம கும்பல்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சந்தவாசல், படைவீடு, கண்ண மங்கலம், ஆரணி, களம்பூர், செய்யாறு, செங்கம், கடலாடி, கலசப்பாக்கம், போளூர், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆடுகளை களவாடும் கும்பல், அதிகளவில் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில், கண்ணமங்கலம், சந்தவாசல், படைவீடு பகுதிகளில் அதிகமாக ஆடுகள் களவாடப்படுவதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆடுகளை வளர்ப்போர் கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் ரம்ஜான் பண்டிகையின் போது ஆடுகளை பல கும்பல் திருடிச் செல்கிறது. இதனை குறைந்த விலைக்கு சந்தை அல்லது இறைச்சி கடையில் விற்பனை செய்துவிடுகின்றனர். பண்டிகை நாளில் ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் வரை (ஆட்டின் எடைக்கு ஏற்ப) விற்பனையாகும். ஒரு ஆடு வளர்க்க பல ஆயிரம் ரூபாய் செலவிடுகிறோம். எங்களது உடல் உழைப்பும் அதிகம். ஆனால், எளிதாக ஆடுகளை திருடிச் சென்றுவிடுகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் தீபாவளி பண்டிகை செலவுக்காக 2 ஆடுகளை திருடிச் சென்ற இளைஞர் சபரீசன் என்பவரை கிராம மக்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். ஆடுகளை திருடிச் சென்றதாக கொடுக்கப்படும் புகார்களை ஏற்க காவல்துறையினர் முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
ஆடுகளை வளர்ப்பவர்களில் பலரும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள். ஆடுகளை விற்று கிடைக்கும் தொகையை நம்பி வாழ்ந்து வருகின்றனர். உப தொழிலாக பெரும்பாலானவர்கள் செய்வதில்லை. பிரதான தொழிலாகவே செய்கின்றனர். எனவே, ஆடுகளை திருடிச் செல்லும் கும்பலை பிடித்து காவல்துறையினர் கைது செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்றனர்.