திருவள்ளூரில் ஆடிட்டர் தற்கொலை: உருக்கமான கடிதத்தை கைப்பற்றிய போலீஸார்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆடிட்டர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள காக்களுர் பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு (33). ஆடிட்டரான இவர், காக்களூர் பகுதியில் அலுவலகம் வைத்து பல நிறுவனங்களுக்காக ஜிஎஸ்டி மற்றும் இதர பொறுப்புகளைக் கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தன் மனைவி சுலோச்சனா பெயரில் நடத்தும் நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி கட்டும் பொறுப்பை கடந்த 2022 ஆண்டு குமரகுருவிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

இச்சூழலில், ரூ.27 லட்சம் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை செலுத்த வேண்டும் என, பிரேம்குமார் நடத்தும் நிறுவனத்துக்கு மறைமுக வரிகள் மற்றும் சுங்க மத்திய வாரியம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஆடிட்டர் குமரகுருவிடம் பிரேம்குமார் கேட்டுள்ளார். அதுமட்டும் இல்லாது பிரேம்குமார் குமரகுருவின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.27 லட்சத்தை ஆடிட்டர் குமரகுரு சரி செய்து கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், மீண்டும் பிரேம்குமாரின் மனைவி சுலோச்சனா பெயரில் உள்ள நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.5 லட்சத்தை ஆடிட்டர் குமரகுரு கட்டாமல் மோசடி செய்துவிட்டதாகவும், இது தொடர்பாக கேட்டபோது ஆடிட்டர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த 21ம் தேதி திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் பிரேம்குமார் புகாரளித்தார். இதைத் தொடர்ந்து, பிரேம்குமார் ரூ.10 லட்சம் கேட்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆடிட்டர் குமரகுரு நேற்று முன் தினம் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போது, அவர், எஸ்பி அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்த தன்னை வழிமறித்து, கொலை செய்துவிடுவதாக பிரேம்குமார் மிரட்டியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இரு தரப்பினர் அளித்த புகார்கள் மீது வழக்குப் பதிவு மற்றும் விசாரணை தொடங்கப்படாமல் இருந்து வரும் நிலையில், இன்று அதிகாலை ஆடிட்டர் குமரகுரு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து, தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, குமரகுருவின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக ஆடிட்டர் குமரகுரு, வீட்டில் தனது தாயாரின் புகைப்படம் அருகே உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார், வீட்டு வாசலில் நிறுத்திவைத்திருந்த அவரது காரிலிருந்த ரூ.2.50 லட்சம், லேப் டாப் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், ஆடிட்டர் குமரகுரு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை அடித்து தூக்கில் தொங்கவிட்டார்களா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE