சேலம் இளங்கோவனின் முசிறி கல்வி நிறுவனங்களில் 3-ம் நாளாக ஐடி ரெய்டு

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே எம்.புதுப்பட்டியில் இளங்கோவனுக்க சொந்தமாக சுவாமி அய்யப்பா அறக்கட்டளை என்ற பெயரில் எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெள்ளாளப்பட்டியில் வேளாண் பொறியியல் கல்லூரி ஆகியவை இயங்கி வருகின்றன.

இந்த கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவராக சேலம் இளங்கோவன் மகன் பிரவீன் உள்ளார். இந்நிலையில் இந்த கல்வி நிறுவனங்களில் அக்.22-ம் தேதி வருமான வரித்துறை துணை ஆணையர் பாலா என்பவர் தலைமையில் கோவை, திருச்சி, சென்னையைச் சேர்ந்த வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையை தொடங்கினர்.

பல கோடி மதிப்புள்ள சொத்தப் பத்திரங்கள், ஆவணங்கள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சோதனை நடத்தி வந்தனர். 3-ம் நாளாக வியாழக்கிழமையும் சோதனை நடைபெற்றது. பாலிடெக்னிக் கல்லூரியில் மாலை 5 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது. ஆனால் அது குறித்து எந்த விவரங்களையும் வருமானவரித்துறையினர் தெரிவிக்கவில்லை. மற்ற கல்வி நிறுவனங்களில் இரவு 7 மணி வரை சோதனை நடைபெற்று வந்தது.

கோவையில் உள்ள சேலம் இளங்கோவனின் சம்பந்தியான பாலசுப்பிரமணி என்பவர் இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். பாலசுப்பிரமணிக்கு சொந்தமான பேப்பர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக இங்கும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE