புதுடெல்லி: பல்வேறு இந்திய விமான நிறுவனங்களின் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் இண்டிகோவின் தலா 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், ஆகாசா ஏர் நிறுவனத்தின் சுமார் 14 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த 11 நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் கிட்டத்தட்ட 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இன்று தங்களின் சில விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வரப்பெற்றதாக ஆகாசா ஏர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவர், "ஆகாசா ஏர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழுக்கள் நிலைமையை கண்காணித்து வருகின்றன. பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், “அனைத்து வாடிக்கையாளர்களும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன” என்று கூறினார்
» பண்ணாரி - திம்பம் சாலையில் தொடரும் விதிமீறல்கள் - ஐகோர்ட் உத்தரவு அமலுக்கு வருவது எப்போது?
» விழுப்புரம்: செஞ்சி அருகே பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
இந்த வார தொடக்கத்தில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு, “விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகளைச் சமாளிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது போன்ற அச்சுறுத்தல்களில் ஈடுபடுபவர்களை விமானப் பயண தடை பட்டியலில் வைப்பது உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த சில நாட்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு புரளியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட விவகாரத்தில், அதனை கையாண்ட முறைக்காக எக்ஸ், மெட்டா தளங்களை கடுமையாக சாடிய மத்திய அரசு, ‘சமூகவலைதளங்கள் குற்றத்தைத் தூண்டுகிறது’ என்றும் விமர்சித்தது.