சட்டத்தின் மீதுள்ள பயம் எப்போது இருக்கும்? - புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் பேச்சு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: காவல்துறையினர் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை உடனடியாக எடுத்தாலே சட்டத்தின் மீதுள்ள பயம் கண்டிப்பாக இருக்கும் என புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் கூறியுள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த காவல்துறையினர், வியாபாரிகள் கலந்தாலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி காவல்துறை டிஐஜி சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார். போக்குவரத்து சீனியர் எஸ்பி பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி-க்கள் செல்வம், மோகன்குமார், இன்ஸ்பெக்டர் நாகராஜ், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் வியாபாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, "புதுச்சேரியில் அமைச்சர்கள் வருவதற்கே இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சிக்னல்களில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. அங்கு இரண்டு, மூன்று போலீஸார் இருந்தாலும் அமைச்சர் வருகையில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதே நிலைதான் புதுச்சேரி முழுவதும் ஏற்பட்டு வருகிறது.

ஆம்புலன்ஸ் வந்தால்கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. முன்பெல்லாம் இப்படி இல்லை. சமீப காலமாகத்தான் இது அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அரசுக்கு அதிருப்திதான் வருகிறது. எனவே இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். முன்பு நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் போலீஸார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். எங்காவது வாகன நெரிசல் ஏற்பட்டால் உடனே அதனை சரி செய்தனர்.

ஆனால், இப்போது ரோந்துப் பணிகள் மேற்கொள்வதில்லை. ரோந்துப் பணியை தொடர வேண்டும். நடைப்பாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். பழைய சிறைச்சாலை வளாகத்தில் மல்டி லெவல் பார்க்கிங் கொண்டு வருவதாக தெரிவித்தார்கள். அதனை விரைவில் கொண்டு வர வேண்டும். சண்டே மார்க்கெட் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுவது நல்லது தான். ஆனால், பிற நாட்களிலும் சண்டே மார்க்கெட் செயல்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என வியாபாரிகள் கோரினர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய டிஐஜி சத்தியசுந்தரம்,"காவல்துறையினரால் தான் சமுதாயத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை சீர்செய்யப்படுகின்றன. காவல்துறையினரால் சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்த முடிகிறது. காவல்துறை மீது பொதுமக்களுக்கு பயம் மட்டுமே இருக்கக்கூடாது. அன்பும், மரியாதையும் இருக்க வேண்டும். தவறு செய்வோர், சட்டத்தை மீறுபவர்கள் தான் காவல்துறையைக் கண்டு பயப்பட வேண்டும்.

காவல்துறையினர் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை உடனடியாக எடுத்தாலே சட்டத்தின் மீதுள்ள பயம் கண்டிப்பாக இருக்கும். புகார்களை பெற்று தேவைப்பட்டால் உடனடியாக வழக்குப் பதிவு செய்வது, கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அதன் பின் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவது காவல்துறையின் கடமை.

விழாக்காலக் கூட்டத்தை சீர்ப்படுத்த காவல்துறையினர் நடந்து சென்று கண்காணிப்பது அவசியம். பொதுமக்களும் பொருட்கள் வாங்கும் சாலைகளில் நடந்து செல்வது நல்லது. போலீஸார் ரோந்து செல்லும் பணி மீண்டும் தொடங்கப்படும். போக்குவரத்து பிரச்சினையைத் தவிர வியாபாரிகளுக்கு ஏற்படும் பிற சங்கடங்களையும் காவல்துறையிடம் தெரிவிக்கலாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று டிஐஜி சத்தியசூந்தரம் கூறினார்.

புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி பேசும்போது, "புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட இடங்களில் இரவில் குப்பை அள்ளும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனாலும் நேரம் போதவில்லை. எனவே காலை நேரத்தில் விரைவாக நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் குப்பைகளை அகற்ற வழி காணப்படும். ஏஎஃப்டி திடலில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்படுவதால், வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை முதல் தற்காலிக பேருந்து நிலையம் வரையும், எதிரே உழைப்பாளர் சிலை வரையும் வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி ஒயிட் டவுன் உள்ளிட்ட பிற இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். சாலையோர வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் செயல்பட வேண்டியது அவசியம்" என்று ஆணையர் கந்தசாமி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE