நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது

By KU BUREAU

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. கேரளா, கர்நாடகாவில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கடந்த ஜூலை 27-ம் தேதி நீர்மட்டம் 71-வது முறையாக 100 அடியையும், ஜூலை 30-ல் முழு கொள்ளளவான 120 அடியையும் எட்டியது. டெல்டா பாசனத்துக்கு அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆகஸ்ட் 9-ல் நீர்மட்டம் 119 அடியாக சரிந்தது.

பின்னர், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நடப்பாண்டில் 2-வது முறையாக கடந்த ஆக. 12-ம் தேதி அணை நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியது. பின்னர், நீர்வரத்து குறைவு, பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு ஆகிய காரணங்களால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கடந்த 13-ம் தேதி 89.26 அடியானது. தற்போது, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரு வாரமாக விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து உள்ளது.

கடந்த 19-ம் தேதி 18,384 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 17,586 கனஅடியாக குறைந்தது. ஆனால், நேற்று 29,850 கனஅடியாக அதிகரித்தது. அதேநேரத்தில், அணை நீர்மட்டம் உயர்ந்து நேற்று காலை 8 மணிக்கு 100 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகை தண்ணீர் தொட்டுள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,500 கனஅடி, கால்வாய்ப் பாசனத்துக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது, அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சியாகவும் உள்ளது. நடப்பாண்டில் ஜூலை 27-ம் தேதிக்கு பின்னர் 2-வது முறையாகஅணை நீர் மட்டம் 100 அடியைஎட்டியுள்ளது. கடந்த 88 நாட்களுக்குப் பிறகு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 31 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE