அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்

By ப.தாமோதரன்

அரக்கோணம்: அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்தாண்டில் 2-வது முறையாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் (விஜிலென்ஸ்) நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.05 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. அரக்கோணம் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கான நிலம், திருமணம் பதிவு உட்பட பல்வேறு பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். மூகூர்த்த நாள் என்றால் இங்கு இரவு 10 மணி வரையிலும் பத்திரப்பதிவு நடைபெறும். தினமும் 50 முதல் 100 டோக்கன்கள் வழங்கப்படும். இந்நிலையில், இடைத்தரகர்களின் தலையீடு அதிகளவில் உள்ளதாகவும், இதன் காரணமாக இங்கு பத்திரப்பதிவுகளுக்கு அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை (23-ம் தேதி) மாலை 4 மணியளவில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அலுவலகத்தில் நுழைவு வாயிலின் இரும்பு தகவை அதிரடியாக பூட்டினர். அலுவலகத்தினை உட்புறமாக பூட்டி உள்ளே பணியாளர்கள் அமரும் இருக்கைகள், மேசைகளிலும், ஊழியர்கள் கொண்டு வரும் டிப்பன் பாக்ஸ், கழிவறை, சாமி படங்களுக்கு பின்புறம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு மேலாக வரை சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 210 ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இதுகுறித்து அங்குள்ள அலுவலர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதியும் அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரே ஆண்டில் இரண்டு முறை அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அரக்கோணம் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE