கோவையில் இரு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: ரூ.4.96 லட்சம் பறிமுதல்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் இருவேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று சோதனை நடத்தி, கணக்கில் வராத தொகையை பறிமுதல் செய்தனர்.

கோவை பீளமேட்டை அடுத்த சேரன்மாநகர் பகுதியில், உள்ளூர் திட்டக்குழும இணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு இன்று (அக்.23) மாலை கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் வந்தனர். அலுவலத்தில் நுழைந்து கணக்கில் வராத தொகை ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.3.96 லட்சம் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகைக்கான ஆவணம் கேட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் போலீஸார் விசாரி்த்து வருகின்றனர்.

அதேபோல், கோவையில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடு செல்லும் சாலையில், க.க.சாவடி அருகே வட்டாரப் போக்குவரத்து சோதனைச் சாவடி அலுவலகம் உள்ளது. இங்கு இன்று (அக்.23) மாலை கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத ரூ.1.01 லட்சம் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அங்குள்ளவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE