திருப்பூரில் அரசு பேருந்து ஓட்டுநர் மடியில் அமர்ந்து தகராறில் ஈடுபட்டவர் கைது

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மடியில் அமர்ந்து, மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நபரை அனுப்பர்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.

கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசுப் பேருந்து நேற்று முன்தினம் (அக்.21) அவிநாசி வழியாக வந்தது. இந்த பேருந்தை கோவை அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் ஓட்டுநராக பணியாற்றும் ரகுராம் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்து திருப்பூர் காந்தி நகர் சிக்னல் பகுதியை வந்தடைந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஓட்டுநர் உடன் தகராறு செய்து பேருந்தில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த போது, அவரது மடியில் அமர்ந்து பேருந்தை எடுக்க விடாமல் தடுத்தார். மது போதையில் அவரோடு தகராறு செய்தார்.

மேலும் பேருந்தை எடுக்க விடாமல் அந்த நபர் தகராறு செய்ததால், பயணிகள் அவரை ஓட்டுநருக்கு இடையூறு செய்ய வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால் அவற்றை பொருட்படுத்தாத அந்த மதுபோதை நபர் தொடர்ந்து ஓட்டுநரின் மடியில் அமர்ந்து வாக்கு வாதம் செய்தார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு தொடர்ந்து விசாரித்தனர்.

குடிபோதையில் இருந்தவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி பிரதீப் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர் ரகுராம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸார் அவரை இன்று (அக்.23) கைது செய்தனர்.

ஓட்டுநர் மடியில் அமர்ந்த குடிபோதையில் இருந்த பிரதீப் மற்றும் ஓட்டுநர் பேசுவதை அலைபேசியில் வீடியோவில் பதிவு செய்த பயணி, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE