புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்தை மீட்டு கையகப்படுத்தி இன்று இந்து அறநிலையத் துறையினர் சீல் வைத்தனர்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புதுவை வேதபுரீஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான காமாட்சியம்மன் கோயில் வீதியில் உள்ள சொத்துகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சொத்துகளை மீட்கக் கோரியும் சுயேச்சை எம்எல்ஏ நேரு இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை செயலர் நெடுஞ்செழியன் இக்கோயில் சொத்து விவரங்கள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை உடனடியாக மீட்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று இச்சொத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டனர்.
இதுபற்றி இந்து அறநிலையத் துறை ஆணையர் சிவசங்கரன் கூறுகையில், "இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் மகாத்மா காந்தி வீதியில் வேதபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான வீடு காமாட்சியம்மன் கோயில் வீதியில் உள்ளது. இந்த இடம் இன்று உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தால் வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கையகப்படுத்தப் பட்டு சீல் வைக்கப்பட்டது" என்றார்.
இதுபற்றி விசாரித்தபோது, "புதுவை ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்து காமாட்சி அம்மன் கோயில் வீதியில் உள்ளது. இது ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த சொத்தின் ஆவணங்கள் இந்து சமய அறநிலைத் துறை வாயிலாக மே மாதம் 26ம் தேதி 1988 ஆண்டு அரசு இதழில் வெளியானது. இப்போது ஆக்கிரமிப்பில் உள்ள இந்த சொத்தை மீட்க இந்து சமய அறநிலைத்துறை சார்பு செயலாளர், தேவஸ்தான செயல் அதிகாரிக்கு உத்தரவிட்டும், 12 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை.
தேவஸ்தானத்தின் பெயரை மாற்றி பட்டா மாற்றம் செய்யும் முயற்சியும் 2017-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. 2020-ல் சொத்தை 30 நாட்களில் மீட்டு, அபகரிக்க நினைப்பவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு சார்பு செயலர் குறிப்பாணை அனுப்பினார். ஆனால், அதற்கும் செயல் அலுவலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், இந்தச் சொத்தை மீட்க இந்து அறநிலையத் துறையில் எம்எல்ஏ நேரு மனு அளித்தார்.
இதையடுத்து அறநிலையத் துறை செயலர் நெடுஞ்செழியன், முதல்வர் ஒப்புதலுடன் கோயில் சொத்தை மீட்டு, வருவாய் ஈட்டும் வகையில் கோயில் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தொடர் நடவடிக்கையால் தற்போது இச்சொத்து இந்து அறநிலையத் துறையால் மீட்கப்பட்டுள்ளது" என்றனர்.