‘ரத்த தானம்’ என்ற பெயரிலும் பண மோசடி - நடப்பது எப்படி?

By பி.ஜோசப் ஜெரால்டு

திருச்சி: மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள அறிவியல் வளர்ச்சி காரணமாக இன்றைய காலகட்டங்களில் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், எதிர்பாராமல் நடக்கும் விபத்து, கர்ப்பிணிகளின் பேறுகாலம், இதய அறுவை சிகிச்சை என ரத்தத்தின் தேவைதான் முதன்மையாக உள்ளது. மருத்துவ உலகில் பல்வேறு சாதனைகள் புரிந்த மனிதனால், செயற்கையாக ரத்தத்தை மட்டும் உருவாக்க முடியவில்லை.

இதனால் ரத்த தேவைக்கு மற்றவர்களிடம் ரத்த தானம் பெற்றே ஆக வேண்டும். தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம் என்பார்கள். ஒருவரின் உயிரை காக்கும் உன்னத சேவையான ரத்த தானத்தில், இந்தியாவிலேயே தமிழகம்தான் 2-ம் இடத்தில் உள்ளது. ரத்தம் தேவைப்படுபவர்கள், தங்கள் ரத்த வகை, மருத்துவமனை, நாள், இடம், செல்போன் எண் போன்றவற்றை குறிப்பிட்டு தங்கள் நண்பர்களுக்கும், சமூக வளைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

அவ்வாறு பகிரும் தகவலை பார்த்து சிலர், அவர்களை தொடர்பு கொண்டு, தாங்கள் ரத்தம் தருவதாகவும், இந்த இடத்தில் நிற்கிறோம் பணம் அனுப்பினால் வந்துவிடுவோம், இருசக்கர வாகனத்தில் வரும்போது பாதி வழியில் வண்டி நின்றுவிட்டது பணம் அனுப்புங்கள், மருத்துவமனைக்குதான் வந்துகொண்டிருக்கிறோம் என கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, சிலர் செய்யும் மோசடி செயல்களால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.

உயிரை காக்கும் ரத்தத்திலும்கூட சிலர் இவ்வாறு செய்வது வேதனை தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இவ்வாறு ரத்த தானம் தருவதாக மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ரத்த தானம் கோரி சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியதாவது: எனது உறவினர் ஒருவரை அறுவை சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு 4 யூனிட் ரத்தம் தேவை என கூறினர். இதுகுறித்து சமூக வலைதளங்களிலும், நண்பர்களுக்கும் தொடர்பு எண்ணுடன் அனுப்பி உதவி கேட்டோம்.

அந்த எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய இளைஞர், தான் திருச்சி அருகே உள்ளதாகவும், தானும் தனது நண்பரும் வந்து ரத்தம் தருகிறோம். வரும் வழியில் வண்டி நின்றுவிட்டது. ஒரு ரூ.700 அனுப்பினால் மருத்துவமனைக்கு வந்துவிடுவோம் என கூறினர். ரத்த தேவையை கருத்தில் கொண்டு அவர்கள் அனுப்பிய எண்ணுக்கு ரூ.700-யை அனுப்பிவைத்தேன். ஆனால், அதன்பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகு, சில நண்பர்கள் வந்து ரத்தம் வழங்கினர்.

பணத்தை ஏமாற்றுவது ஒருபுறம் இருந்தாலும், உயிருக்கு போராடும் ஒருவருக்கு அளிக்கும் உன்னத சேவையில்கூட சிலர் இவ்வாறு செயல்படுவது வேதனை தருகிறது என தெரிவித்தார். ரத்த தானம் அளித்து பல உயிர்களை காப்பாற்றும் நல்ல மனிதர்களுக்கு மத்தியில், சிலர் அதை வைத்தும் மோசடியில் ஈடுபடுவது எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறியவேண்டும். ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ரத்த தானம் கொடுக்க முன்வரும் பலர், பணம் உள்ளிட்ட நன்கொடைகளை எதிர்பார்க்கமாட்டார்கள். இருப்பினும், இவ்வாறு பணம் கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE