ரூ.1.47 கோடி மோசடி: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஏசு ராஜசேகரன். இவர் இதற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றினார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 27 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக ஏசு ராஜசேகரன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்திடம் புகார் அளித்தனர்.

அதன் பேரில் எஸ்பி சுந்தரவதனம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரனை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆய்வாளர் ஏசு ராஜசேகரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூர்த்தி இன்று உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE