வடலூர் அருகே பிரியாணி அரிசி மூட்டையில் ரூ.15 லட்சம் பணம்: போலீஸ் விசாரணை

By க. ரமேஷ்

கடலூர்: வடலூர் ராகவேந்திரா சிட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் ( 40). இவர் நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா ட்ரேடர்ஸ் என்ற பெயரில் அரிசி மண்டி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று இவருடைய மனைவியின் தம்பி சீனிவாசன் கடையில் இருந்த போது நெய்வேலி அருகே மேல்பாதி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பூபாலன் (62) என்பவர் காலை 10 மணியளவில் அரிசி வாங்க கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையில் இருந்த சீனிவாசனிடம் 16 கிலோ பிரியாணி அரிசி வேண்டும் என பூபாலன் கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசனும் கடையிலிருந்த 16 கிலோ அரிசி மூட்டை ஒன்றை எடை போட்டு பூபாலனிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, கடையின் உரிமையாளர் சண்முகம் இரவு 10:30 மணியளவில் கடைக்கு வந்துபோது, குறிப்பிட்ட இடத்தில் இருந்த அரிசி மூட்டைகளை பார்த்துள்ளார். அப்போது, அங்கிருந்த 16 கிலோ அரிசி மூட்டை காணாமல் போனதைக் கண்டு அதிர்ந்துள்ளார். மேலும் அவர், சீனிவாசனிடம் கேட்டபோது, அதை வழக்கமாக வரும் வாடிக்கையாளரான பூபாலனுக்கு விற்று விட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு மேலும் அதிர்ந்த சண்முகம், அதில் ரூ.15 லட்சம் பணம் இருந்ததை கூறியதுடன், சீனிவாசனை கடுமையாக சாடியுள்ளார்.

இதையடுத்து, பூபாலனின் வீட்டை தேடிச் சென்ற சண்முகம் அவரது மகள் தாட்சாயணியிடம் நடந்த விவரங்களை கூறி பணத்தை தரும்படி கூறியுள்ளனர். இதனிடையே, பூபாலனின் மகள் தாட்சாயிணி வீட்டினுள் சென்று ரூ.10 லட்சத்தை எடுத்து வந்து சண்முகத்திடம் கொடுத்துள்ளார். இதில் மேலும் அதிர்ந்த சண்முகம், “நான் ரூ.15 லட்சம் வைத்திருந்தேன். ரூ.10 லட்சம் தான் கொடுக்கின்றீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தாட்சாயிணி “அதில் ரூ.10 லட்சம் தான் இருந்தது” என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், உடனடியாக நேற்று இரவு வடலூர் காவல் நிலையத்தில் பூபாலனிடம் இருந்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சண்முகம் ஏன் ரூ.15 லட்சம் பணத்தை மூட்டையில் வைத்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE