தள்ளுபடி விலையில் பட்டாசு தருவதாக மோசடி: விழிப்புடன் இருக்க சைபர் க்ரைம் போலீஸார் அறிவுரை

By KU BUREAU

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து நூதன மோசடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக காவல் துறை சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் போன்ற பிரபலமான சமூக ஊடகத் தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் இது தொடர்பாக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் வாட்ஸ்-அப் மூலமாகவோ அல்லது செல்போன்அழைப்பு மூலமாகவோ இவர்க ளைத் தொடர்புகொள்கிறார்கள். இந்த இணையதளங்கள் வெளித்தோற்றத்தில் காண்பதற்கு உண்மையானது போல தோன்றினாலும், இவை பணத்தைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்டவை. இவை பெரும்பாலும் உண்மையான தோற்றமுடைய தயாரிப்பு பட்டியல்கள், விலைகள் மற்றும் பணம் செலுத்தும் விருப்பங்களைக் காண்பிக்கும்.

பணம் செலுத்தும் பொழுது சில கூடுதல் தள்ளுபடிகளும் சேர்த்துகாண்பிக்கப்படும். ஆனால், பணம்செலுத்தியவுடன், ஆர்டர் செய்தபொருட்கள் நம்மை வந்து சேரும்என்பதில் எந்த உறுதியும் இல்லை.இவ்வாறான தளங்களை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிடுகிறார்கள். மேலும், இந்த வலைதளங்களிலுள்ள தங்கள் தகவல்களையும் நீக்கிவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பணத்தைப் பறிகொடுக்க நேரிடுகிறது.

கூடுதலாக, பாதிக்கப்பட்ட வர்கள் தங்களின் தனிப்பட்ட நிதி தகவல்களைப் பகிர்வதன் மூலம் அவர்களது சுயவிவரங்களை மோசடிக்காரர்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்த வழிவகுக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் அறிவுறுத்தியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE