பொன்னேரி: மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போலீஸ் எனக் கூறி வடமாநில லாரி ஓட்டுநரிடம் பணம், மொபைல் போன் பறித்தது தொடர்பாக ஒருவரை இன்று போலீஸார் கைது செய்தனர்.
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் யாதவ் (22). லாரி ஓட்டுநரான இவர், கடந்த 20ம் தேதி மாலை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் மீஞ்சூர் - சுங்கச்சாவடி அருகே லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தான் போலீஸ் எனக்கூறி, பிரிஜேஷ் யாதவை லாரியில் இருந்து இறங்கச் செய்து, அவரிடம் இருந்து, ‘ஜி-பே’ மூலம் ரூ.2 ஆயிரம், கையில் ரூ.600 மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறித்து சென்றார்.
இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், பிரிஜேஷ் யாதவிடம், போலீஸ் எனக் கூறி பணம் மற்றும் மொபைல் போன் பறித்தது தொடர்பாக மீஞ்சூர், ஜவகர் நகரை சேர்ந்த மூர்த்தி (38) என்பவரை இன்று போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஆயிரம் ரூபாய், மொபைல் போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.