சென்னை தொழிலதிபரிடம் ரூ.14 கோடி நூதன மோசடி - 6 பேர் கும்பல் கைது

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: 500 சதவீதம் லாபம் பெற்றுத் தருவதாக கூறி முதலீடாக பணம் பெற்று தொழிலதிபரிடம் ரூ.14 கோடி நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது. இதில், தொடர்புடைய 6 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தமிழக காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவில் அண்மையில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், "கடந்த ஏப்ரல் மாதம் வாட்ஸ்-அப் மூலம் ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசினார். அந்த நபர், 'பிளக் ராக் அஸட் மேனேஜ்மெண்ட்' பிஸினெஸ் ஸ்கூல் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 2 மாதத்தில் 500 சதவீதம் லாபம் கிடைக்கும் எனவும், தங்களது நிறுவனத்துக்கு செபி அனுமதி இருப்பதாகவும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

அந்த நபரின் பேச்சை நம்பி, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய முன் வந்தேன். அப்போது அந்த நபர் குறிப்பிட்ட செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய வைத்தார். பின்னர் அதன் மூலம் பல்வேறு வங்கி கணக்குகள் மூலமாக என்னிடமிருந்து ரூ.14 கோடி முதலீடு பணத்தை பெற்றார். ஆனால் அந்த நபர் கூறியபடி, 2 மாதங்களுக்கு பின்னர் 500 சதவீத லாப தொகை வழங்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த நான், அந்த நிறுவனம் குறித்து, அந்த நபர் குறித்தும் விசாரித்தேன்.

அப்போது அந்த நிறுவனம் போலியானது என்பதும், அந்த நபர் செபி அனுமதித்ததாக போலி சான்றிதழை என்னிடம் காட்டியிருப்பதும், எனது பணத்தை அந்த நபர்கள் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் உத்தரவிட்டார். அதன்படி, அப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டது நீலாங்கரை ரெங்கா ரெட்டி கார்டன் பகுதியைச் சேர்ந்த மதன் (43), ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சதீஷ் சிங் (46), திருநின்றவூர் பிரகாஷ் நகரைச் சேர்ந்த சரவண பிரியன் (34), புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஷாபகத் (38), மதுரை சொக்கலிங்கநகரைச் சேர்ந்த மணிகண்டன் (30), செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்தனர். இவர்களின் பின்னணியில் உள்ள வெளிநாட்டு கும்பலை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE