அரூரில் பைக் - கார் மோதி விபத்து: ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு

By எஸ்.செந்தில்

அரூர்: தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே கார் பைக் நேருக்கு நேர் மோதலில், எல்லப்புடையாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எல்லப்புடையாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் கே.ஆர். மாரியப்பன் (59), இவர் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக சென்று விட்டு தனது பைக்கில் பகல் 1.30 மணியளவில் அரூர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது கடத்தூர் அருகேயுள்ள ஒடசல்பட்டி கூட்டுரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் பைக்கின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE