சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: நீதிபதியை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

By கி.மகாராஜன்

மதுரை: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் நீதித்துறை நடுவரிடம் குறுக்கு விசாரணை நடத்தக்கோரி சார்பு ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ல் கரோனா பரவல் காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறேன். இந்த வழக்கின் விசாரணை மதுரையில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல், 36-வது அரசு சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார். என் தரப்பில் நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை நடத்த முடியவில்லை.

இதனால், நீதித்துறை நடுவர் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது நியாயமான விசாரணையை மறுப்பதாக உள்ளது. எனவே, என் மனுவை தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நீதித்துறை நடுவர் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், நீதித்துறை நடுவர் அளித்த நூறு பக்க சாட்சியம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், “பலமுறை வாய்ப்பளித்தும் ரகுகணேஷ் தரப்பில் நீதித்துறை நடுவரிடம் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, “நீதித்துறை நடுவர் அளித்த நூறு பக்க சாட்சியம் உள்ளது. இதனை எவ்வாறு குறுக்கு விசாரணை செய்வீர்கள்? திறந்த நீதிமன்றத்தில் தான் நீதித்துறை நடுவர் சாட்சியம் அளித்துள்ளார். அவ்வாறு இருக்கும் போது மீண்டும் குறுக்கு விசாரணை நடத்தக் கேட்பது வழக்கை இழுத்தடிப்பது போல் உள்ளது. எனவே, மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE