தஞ்சாவூர்: குட்கா புகையிலை பதுக்கி வைத்த நிறுவனத்துக்கு சீல்

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ரகசியமாக இயங்கி வந்த அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மொத்த விற்பனை நிறுவனத்திற்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

தஞ்சாவூர், மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மொத்த மளிகைக் கடை குடோனில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கப்பட்டு சில்லறை வியாபாரம் செய்யப்படுவதாக தஞ்சாவூர் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சித்ரா மற்றும் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா மற்றும் அலுவலர்கள், போலீஸார், அந்த குடோனுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்தக் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கிலோ எடையிலான குட்கா புகையிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த குடோனைப் பூட்டி சீல் வைத்தனர். இந்த மளிகைக் குடோனில் குட்கா புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து அவற்றை விற்பனை செய்யும் மையமாக இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. பெங்களூருவில் இருந்து மளிகை பாக்கெட்டுகள், தக்காளி போன்ற காய்கறிகளுடன் குட்கா பொருட்களையும் பெட்டிகளில் வைத்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை தஞ்சை பகுதியில் குட்கா புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததாக 900 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE