சென்னை: குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி, யூடியூபர் இர்பானின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், அவர் நேற்று தனது மனைவி பிரசவ வலியால் துடிக்கும் காட்சிகள், குழந்தை பிறந்தவுடன் அதை கையில் ஏந்தியிருக்கும் காட்சிகளை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவால் இப்போது இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அறைக்குள் செல்ல வேண்டும் மற்றும் முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவைசிகிச்சையின்போது கத்தரிக்கோல் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. இந்நிலையில், குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உள்ள தொப்புள்கொடியை வெட்டியதற்கு இர்பானுக்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இர்பான் தனது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்து தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார். இது சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்த சூழலில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்பான்.
» கடலூரில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு: மலர் வளையம் வைத்து அஞ்சலி
» தமிழகத்தில் அதிமுக கூட்டணி தற்போது வலுவானதாக அமையவில்லை: எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருத்தம்