சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சென்னைமத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடந்த 17-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச் சாவடியில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாழைத்தார்களை ஏற்றி வந்து கொண்டிருந்த ஆந்திரா பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை பிடித்து போலீஸார் சோதனை நடத்தினர். அதில், வாழைத்தார்களுக்கு கீழே 100 கிலோ எடையுள்ள 10 மூட்டை கஞ்சா இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
மேலும், சரக்கு வாகனத்தில் ரகசிய அறை இருப்பதை பார்த்த போலீஸார், அதைதிறந்து பார்த்தபோது, அதிலும் 100 கிலோ எடையுள்ள 10 மூட்டை கஞ்சா பார்சல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சரக்கு வாகனத்துக்கு பாதுகாப்புக்காக, வாகனத்தின் முன்னாள் வந்து கொண்டிருந்த காரையும் போலீஸார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, 20 மூட்டைகளில் இருந்த 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், அது குறித்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது: விசாரணையில், சகோதரர் களான ஆந்திராவைச் சேர்ந்த மோகன்ராஜ், சண்முக நாதன், பால முருகன் மற்றும் காரை ஓட்டி வந்த செந்தில்நாதன் ஆகியோர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தமிழகத்தில் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
» 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சிறுவர்கள் கைது: உ.பியில் அதிர்ச்சி
» ‘மசாஜ் வலை’ - புதுச்சேரியில் இளைஞர்களை குறிவைத்து 2 மாதங்களில் ரூ.7 லட்சம் மோசடி!
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.20 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர். மத்திய நுண்ணறிவுப்பிரிவு போலீஸாரின் நடவடிக்கையை, டிஜிபி சங்கர் ஜிவால், கூடுதல் காவல்துறை இயக்குநர் அமல்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.