‘மசாஜ் வலை’ - புதுச்சேரியில் இளைஞர்களை குறிவைத்து 2 மாதங்களில் ரூ.7 லட்சம் மோசடி!

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “மசாஜ் செய்ய பெண்கள் உள்ளனர்” என இளைஞர்களை குறி வைத்து இணையவழி மோசடிக்காரர்கள் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.7 லட்சம் வரை ஜிபே மூலம் பணம் ஏமாற்றியுள்ளனர் எனவும், இளைஞர்கள் பணத்தை ஏமாற வேண்டாம் எனவும் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். அவர் ஆப் மூலம் இணையவழியில் மசாஜ் செய்ய பெண் தேடியுள்ளார். மேலும் அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது முன்பணம் செலுத்தினால் அனைத்து வசதியும் ஏற்பாடு செய்து தருவதாக இளைஞரிடம் பேசிய அடையாளம் தெரியாத நபர் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த இளைஞர் மொத்தமாக ரூ.30 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன்பிறகு எந்தவித தகவலும் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது சம்மந்தமாக இன்று சைபர் கிரைம் எஸ்.பி பாஸ்கரன் கூறும்போது, “இது போன்ற பெண்கள் சம்பந்தமான தேடுதலங்கள் பெரும்பாலும் பொய்யான நபர்களால் அல்லது இணைய வழி மோசடிக்காரர்கள் கையாளப்படுகிறது. ஆகவே இணையவழியில் இது போன்ற மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் இருக்கின்றனர் என்று வருகின்ற அனைத்து தகவல்களுமே இணைய வழி மோசடிக்காரர்களால் பரப்பப்பட்டு இளைஞர்களை குறி வைத்து ஏமாற்ற பயன்படுகிறது. ஆகவே பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். மேலும் பெரும்பாலான இளைஞர்கள் பணத்தை அனுப்பிவிட்டு இது சம்பந்தமாக புகார் தெரிவிக்கவே தயக்கம் காட்டுகின்றனர். இதுபோன்று புகார் அளிக்க முன்வராத காரணத்தினால் இணையவழி மோசடிக்காரர்கள் இவற்றை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து ஏமாற்றி பணம் பறிக்கின்றனர்.

எனவே பாதிக்கப்படுவோர் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும். அதோடு, இது சம்மந்தமான வழக்கில் பணம் பெற அனுப்பிய ஜிபே வங்கி விவரங்களை பெற்று ஆராய்ந்த போது கடந்த இரண்டு மாதங்களில் ரூ.7 லட்சத்துக்கு மேல் பணம் பரிவர்த்தனை ஆகியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பணம் அனைத்துமே இதுபோன்று இளைஞர்களை குறி வைத்து ஏமாற்றி பெறப்பட்ட பணமாகவே இருக்கும். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE