சூனியம் வைத்ததாக குற்றச்சாட்டு: முதியவரை தீ வைத்து எரித்த கிராம மக்கள்

By KU BUREAU

ஒடிசா: நுவாபாடா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 50 வயது முதியவர் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டி கிராம மக்கள் அவரை தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

நுவாபாடா மாவட்டத்தில் உள்ள போர்திபாடா கிராமத்தில் வசிக்கும் மக்கள் நேற்று மாலை ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அந்த கூட்டத்துக்கு 50 வயதான கம் சிங் மஜ்ஜி என்பவரும் வரவழைக்கப்பட்டார். மஜ்ஜி சூனியம் செய்ததாக கிராம கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு தண்டனையாக அவரை வைக்கோலால் செய்யப்பட்ட கயிறுகளால் கட்டி தீ வைத்தனர்.

மஜ்ஜியின் உடலை தீ சூழ்ந்ததால், அவர் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு ஓடினார். தீக்காயங்களால் வலியால் துடித்து கத்தி அலறினார். ஆனால், யாரும் அவருக்கு உதவ முன்வராததால், கடைசியாக குளத்தில் குதித்தார். அவரை குளத்தில் இருந்து மீட்ட குடும்பத்தினர், சினாப்பிளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பேசிய மஜ்ஜியின் மகன் ஹேம் லால் "கிராம மக்கள் கூட்டத்தைக் கூட்டி, என் தந்தை சூனியம் செய்ததாக குற்றம்சாட்டி மிரட்டினர். அவர் குற்றச்சாட்டை மறுத்ததால், அவர்கள் முதலில் அவரை அடித்து, பின்னர் தீ வைத்தனர்" என்று கூறினார்

இதுகுறித்து சினாபல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE