கோவை விமான நிலையத்தில் 4 நாட்களில் 40,000 வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்!

By இல.ராஜகோபால்

கோவை: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சிகரெட் கடத்திவருவது அதிகரித்துள்ளது. கோவையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது வரை ரூ. 60 ஆயிரத்தை தாண்டாமல் உள்ளது.

மறுபுறம் வெளிநாட்டு சிகரெட் போன்ற மற்ற பொருட்களை கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கோவை விமான நிலையத்தில் கடந்த 8-ம் தேதி அபுதாபியில் இருந்து வந்த பயணியிடம் 14,000 வெளிநாட்டு சிகரெட், 11-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியிடம் 26,000 வெளிநாட்டு சிகரெட் சுங்க வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு சென்று வரும் பயணிகள் ஆண்கள் 24 கிராம், பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை கொண்டு வர அனுமதி உள்ளது. ஓராண்டு காலம் வெளிநாட்டில் தங்கி இருந்து பின் இந்தியா திரும்புவோர் 10 சதவீத வரி செலுத்தி ஒரு கிலோ வரை தங்கம் கொண்டு வரலாம்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைந்துள்ளதால், தங்கம் கடத்தல் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோர் சிறிது காலம் நிறுத்தி வைத்திருக்கலாம். தங்கத்தின் விலை உயர தொடங்கினால் மீண்டும் கடத்தலும் தொடர வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு பொருட்களுக்கு சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக, இலங்கையில் இந்திய பட்டுப்புடவை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதே போல் சிங்கப்பூரில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஊறுகாய் உள்ளிட்ட பல வித உணவு பொருட்களுக்கும், சந்தனம் மற்றும் அதை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கும் அதிக தேவை உள்ளது.

எனவே ‘குருவி’யாக (கடத்தலில்) செயல்படுவோர் இந்தியாவில் இருந்து செல்லும் போது இத்தகைய பொருட்களை கொண்டு செல்வதும் அங்கிருந்து திரும்பும்போது வெளிநாட்டு சிகரெட்கள் போன்ற இதர பொருட்களை கடத்தி வருவதும் அதிகரித்துள்ளது. தனிநபர் அதிகபட்சமாக 200 சிகரெட்களை கொண்டு வர அனுமதி உள்ளது.

அதற்கு மீறி கொண்டு வந்தால் அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்கிய பின் விமானத்தில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகள் சுங்கவரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் முதல்கட்டமாக ஸ்கேனிங் செய்யப்படும்.

சந்தேகிக்கும் வகையில் பொருட்கள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக அந்த உடைமையின் மீது ‘மார்க்கிங்’ செய்து உள்ளே ‘கன்வேயருக்கு’ அனுப்பி வைக்கப்படும். அப்போது அந்த உடைமையின் சொந்தக்காரரான பயணியிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லிட்டர் மதுபானம் மட்டும் கொண்டு வர அனுமதி உள்ளது. அதை மீறி கொண்டு வரப்படும் பாட்டில்கள் ஒவ்வொன்றுக்கும் வரி செலுத்த வேண்டும். இருப்பினும் நண்பர்களுக்காக, விசேஷத்துக்காக என பல்வேறு காரணங்களை கூறி சில பயணிகள் அதிக மதுபான பாட்டில்களை கொண்டு வருவார்கள். அதிகாரிகள் சோதனையில் பிடிப்பட்டபோது அவற்று வரி செலுத்தி எடுத்து செல்வார்கள், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE