திருநெல்வேலி நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை: மனித உரிமை ஆணையம் விசாரணை

By KU BUREAU

திருநெல்வேலி: நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மையத்தின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் என்பவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு `ஜால் நீட் அகாடமி' என்ற பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். ஆண், பெண்களுக்கு தனித் தனி விடுதிகளுடன் இம்மையம் செயல்படுகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு தங்கி, பயிற்சி பெற்று வருகிறார்கள்.

கடந்த மாதம் 25-ம் தேதி காலையில் மாணவர்கள் சிலர் வகுப்பறையில் தூங்கியுள்ளனர். சிசிடிவி கேமரா மூலம் இதைக் கண்டஜலாலுதீன் அஹமத், மாணவர்களை பிரம்பால் அடித்துள்ளார். இதில் காயமடைந்த மாணவர்கள், வெளியே தெரிவிக்கவில்லை. மாணவ, மாணவிகள் தங்கள் காலணிகளை வகுப்பறை வாயிலில் விட்டு வர வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. அலமாரியில் காலணியை முறையாக வைக்காத மாணவி மீது, ஆசிரியர் ஒருவர் காலணியை தூக்கி வீசுவது போன்ற சிசிடிவி காட்சிகளும் நேற்று வெளியாகின.

பயிற்சி மையத்தில் இருந்து சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட, தாழையூத்தை சேர்ந்த அமீர் உசேன் என்பவர், சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ ஆதாரத்துடன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், 3 பிரிவுகளில் பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் அஹமத் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

நெல்லையில் மனித உரிமை தொடர்பான வழக்குகளை நேற்று விசாரித்துக் கொண்டிருந்த, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கவனத்துக்கு, இந்த தகவல் வந்தது. உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட நீட் பயிற்சிமையத்துக்குச் சென்று, மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டது தவறு. அவர்கள் அனைவரும் சிறுவர்கள். எனவே, சிறுவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல் துறையினரின் நடவடிக்கை குறித்தும் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணை அறிக்கை, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE