திருப்பூர்: லஞ்ச வழக்கில் மின்வாரிய செயற்பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான மின்வாரிய செயற்பொறியாளருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் இன்று (அக்.18) தீர்ப்பு அளித்தது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அம்மாபட்டியை சேர்ந்தவர் தாமோதரன் (45). இவர் அப்பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் வேலை செய்யும் நார் தொழிற்சாலையில் ஏற்கனவே 52 குதிரைத்திறன் மின்சார இணைப்பு இருந்தது. இதை 90 குதிரைத்திறன் அளவு மின் இணைப்பு கேட்டு பெதப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

இந்த மின் இணைப்பை மாற்றி கொடுப்பதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அங்கு உதவி செயற் பொறியாளராக பணியாற்றிய சையத் பாபுதீன் (55) கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தாமோதரன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தாமோதரனிடம் கடந்த 2011ம் ஆண்டு ஏப்.29ம் தேதி கொடுத்து அனுப்பினார்.

பெதப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சையத் பாபுதீனிடம் ரூ.10 ஆயிரத்தை தாமோதரன் கொடுத்தார். அந்த நேரத்தில் ஏற்கனவே அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சையத் பாபுதீனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு தற்போது கூறப்பட்டது. லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சையத் பாபுதீனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்லத்துரை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE