திருச்சி: திருச்சி அரியமங்கலத்தில் மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் நில மோசடி தொடர்பாக ஏழு மணி நேரம் சோதனைக்கு பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும், பாதுகாப்பு பெட்டகத்தையும் (லாக்கர்) போலீஸார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
திருச்சி மாவட்ட எஸ்பி வீ.வருண்குமார் உத்தரவின்பேரில், ‘ஆப்ரேஷன் அகழி’ என்ற பெயரில் நில மோசடி, நிலம் அபகரிப்புத் தொடர்பாக போலீஸார் பல்வேறு ரவுடிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நில மோசடி தொடர்பாக திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை லட்சுமிபுரத்தை சேர்ந்த நில வணிகம், மர வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் துவாக்குடி போலீஸார் சோதனை மேற்கொள்ள வந்தனர். அப்போது வீட்டில் இருந்த பெண்கள் வாரன்ட் இல்லாததால் போலீஸாரை அனுமதிக்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த போலீஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீஸார் நீதிமன்ற ஆணை பெற்று மோகன் பட்டேல் வீட்டில் நேற்று சோதனை நடத்த வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டினுள் இருந்த நபர்கள் கதவைத் தட்டி நீண்ட நேரமாகியும் திறக்காததால் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகா முன்னிலையில் போலீஸாார் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர்.
» மதுரையில் ‘ஆயுர்வேத க்ளினிக்’ பெயரில் பாலியல் தொழில்: பெண் உட்பட இருவர் கைது
» கச்சத்தீவில் கரை ஒதுங்கிய 25 கிலோ கஞ்சா மூட்டை: கைப்பற்றியது இலங்கைக் கடற்படை
மதியம் 2.30 மணிக்கு ஆரம்பித்த சோதனை தொடர்ந்து நள்ளிரவு வரை நடைபெற்றது. மோகன் பட்டேலின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீஸார் கணக்கெடுத்து பதிவு செய்து அவரது மகள் பூர்ணிமா பட்டேலிடம் கையெழுத்திடுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீஸார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். மேலும் வீட்டில் இருந்த லாக்கரை திறக்க போலீஸார் வலியுறுத்தியபோது, வீட்டில் உள்ளவர்கள் தங்களிடம் சாவி இல்லை எனக்கூறி திறக்க மறுத்தனர். இதையடுத்து, சுமார் 500 கிலோ எடை கொண்ட லாக்கரை போலீஸார் அங்கிருந்து தகர்த்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியே எடுத்து வந்தனர்.
பின்னர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து காவல் துறைக்கு சொந்தமான மீட்பு வாகன (கிரேன்) உதவியுடன் லாக்கரை தூக்கி காவல் வாகனத்தில் வைத்து அனுப்பி வைத்தனர். இந்த லாக்கரை நீதிபதி முன் திறக்கப்பட்டு அதில் உள்ள ஆவணங்கள் கைப்பற்றப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே நள்ளிரவு 12 மணி கடந்ததை தொடர்ந்து மோகன் பட்டேலின் மகள் பூர்ணிமா பட்டேல் லாக்கரை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.