கம்பம்: வாகனம் பழுதுநீக்கும் நிலையத்தில் தீ விபத்து - 5 வாகனங்கள் எரிந்து சேதம்

By பி.டி.ரவிச்சந்திரன்

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் வாகனம் பழுது நீக்கும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வேன் உள்ளிட்ட ஐந்து கார்கள் எரிந்து சேதமடைந்தன.

தேனி மாவட்டம் கம்பம் சிஎம்எஸ் நகரில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மிளாமலை பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவர் கார், வேன், ஜீப் பழுதுபார்க்கும் நிலையம் நடத்தி வருகிறார். பழுது பார்க்க வந்த வேன், கார்களை நேற்று இரவு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மொத்தம் ஒன்பது வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை நிறுத்தி இருந்த வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கம்பம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை போராடி கட்டுப்படுத்தினர். அதற்குள் அங்கிருந்த வேன், ஒன்று முழுமையாக எரிந்து சேதமடைந்தது. தொடர்ந்து நான்கு கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. வாகனத்தில் உள்ள வயரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் சேதமடைந்ததாக தெரிகிறது. இதனிடையே, விபத்து தொடர்பாக ஒர்க் ஷாப் உரிமையாளர் அனீஸ் கொடுத்த புகாரில் கம்பம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE